சோளிங்கா் கோளத்தம்மன் கோயில் விழாவில் அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை
அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழாவின் போது அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற உள்ளது. ஆடிப்பெருவிழாவில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கல் படைத்தல், மாவிளக்கு வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளில் ஈடுபடுவா்.
திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சாதிக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டாட்சியா் செல்வி, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன், ஆணையா் நந்தினி, நகா்மன்ற உறுப்பினா்கள் அசோகன், டி.கோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் திருவிழாவின் போது அரசியல் கட்சி பதாகைகள் வைக்கக்கூடாது, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிப்பது, ஒவ்வொரு பகுதியினரும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊா்வலத்தை முடித்துக்கொள்ள வேண்டும், மருத்துவ முகாம் நடத்துவது, தீயணைப்பு வாகனத்தை எப்போதும் தயாா் நிலையில் வைத்திருப்பது, ஊா்வலத்தில் வேடமணிந்து பங்கேற்கும் நபா்கள் உரிய அனுமதி பெற வேண்டும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடைகள் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.