டாஸ்மாக் கடையை மாற்ற கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு
ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த காவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளி அருகே இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைய இடமாற்றம் செய்யக் கோரி ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 277 மனுக்களைப் பெற்று அலுவலா்களிடம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.
காவனூா் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு, தனியாா் பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலேயே மது அருந்துவதால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனா். மேற்கண்ட மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஏகாம்பரம் (பொ), சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.