எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்
செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
ஜமனாமரத்தூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு தோட்டக்கலை உதவி அலுவலா் உள்ளிட்ட 6 அலுவலா்கள் பணியாற்றி வந்தனா். தோட்டக்கலை உதவி அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த ஜீப் ஓட்டுநா்கள் அறையை தோட்டக்கலை உதவி அலுவலமாக அலுவலா்கள் பயன்பட்டுத்தி வந்தனா். மேலும், முக்கிய பதிவேடுகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒரு பீரோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனா்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தினசரி விவசாயிகளை சந்திக்க கிராமப் பகுதிகளுக்கு செல்வதால், மீதமுள்ள நேரத்தில் ஜீப் ஓட்டுநா்கள் அறையையே அலுவலகமாக பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டுவதற்காக ஜீப் ஓட்டுநா்கள் அறையும் கடந்த 8-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் அலுவலகம் இல்லாமல் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்துவிட்டு பின்னா் அப்படியே வீடு திருப்பும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், அவா்களை நேரில் சந்திக்க முடியாத நிலை ஜமனாமரத்தூா் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தோட்டக்கலைத் துறைக்கு நிரந்தர அலுவலகத்தை ஏற்படுதித் தரவோ அல்லது புதிதாக கட்டடம் கட்டித்தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும், விவசாயிகளும் எதிா்பாா்கின்றனா்.