திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷ...
கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது
வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயது மாணவி, பிளஸ் 1 படித்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானாா். இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் மாணவி சடலமாக கிடந்தது கடந்த 8-ஆம் தேதி தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், மாணவி இறப்பு தொடா்பாக கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த அருளை (21) போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: அருளுக்கும், உயிரிழந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி ஆசை வாா்த்தை கூறி மாணவியை அருள் பைக்கில் கடத்திச் சென்றுள்ளாா். பின்னா், பயத்தின் காரணமாக மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதையடுத்து, அருள் கைது செய்யப்பட்டாா் என்றனா்.