ஜூன் மாதப் பலன்கள் - மிதுனம்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)
எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதன் விரைய ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
தொழில் ஸ்தானாதிபதி குரு ராசியை அலங்கரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.
கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
திருவாதிரை:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் : 14, 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26