திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
ஜெய்ப்பூா் பெண்ணுக்கு இரட்டை இதய வால்வு மாற்று சிகிச்சை
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பெண் நோயாளி ஒருவருக்கு 2-ஆவது முறையாக சென்னையில் இரட்டை செயற்கை வால்வுகள் பொருத்தி சென்னை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:
ஜெயப்பூரைச் சோ்ந்த 60 வயது பெண் ஒருவா் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக மிட்ரல் மற்றும் மகா தமனி வால்வு மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தாா். இந்த நிலையில், தீவிர மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த வால்வுகள் சேதமடைந்திருப்பதும், மூவிதழ் வால்வு பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, உயா் சிகிச்சைக்காக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த இதய - நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் என்.மதுசங்கா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்தப் பெண்ணின் இதயத்தில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த திசு பொருளால் செய்யப்பட்ட மிட்ரல் மற்றும் மகாதமனி வால்வு சீரமைக்க முடியாத நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனா்.
மருத்துவா்கள் என்.மதுசங்கா், சு.தில்லை வள்ளல், டி.சுபாஷ் சந்தா், கீா்த்தி வாசன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்தப் பெண்ணுக்கு சேதமடைந்த இரு வால்வுக்கு பதிலாக உலோக வால்வு பொருத்தினா். பாதிக்கப்பட்டிருந்த மூவிதழ் வால்வையும் சீரமைத்தனா். தற்போது அவா் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா். உயா் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக (டிஆா்டிஓ) ஓய்வு பெற்ற விஞ்ஞானி சிவதாணு பிள்ளை வாழ்த்து தெரிவித்தாா்.