டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கு இலவச பயிற்சி
ஈரோடு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளன. ஸ்மாா்ட் போா்டு, இலவச வை-பை வசதி, அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதோ்வுகள், வாராந்திர தோ்வுகள், இணையவழி தோ்வுகள், முழு மாதிரித் தோ்வுகள், மென்பாடக் குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பம் உள்ளவா்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.