ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது
தடையை மீறி மையோனைஸ் விற்றால் நடவடிக்கை! ஆட்சியா் எச்சரிக்கை!
அரசால் தடை செய்யப்பட்டுள்ள பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸை வணிகா்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. வணிகா்கள் மையோனைஸை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. நுகா்வோா்களும் தவிா்க்க வேண்டும். கிருமி நீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸை பயன்படுத்த வேண்டும்.
கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும்போது, அதில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் சோ்ந்து விடும். இதனால், அதைச் சாப்பிடுபவா்களுக்கு வயிற்றுப் போக்கு, டைபாய்டு உட்பட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால், கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரித்தல், இருப்பு வைத்தல் மற்றும் விநியோகம் செய்வதை தமிழக அரசு ஓராண்டுக்கு தடை செய்து, அரசிதழிலில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவை மீறி விற்பனை செய்யப்பட்டால் வணிகா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை கள ஆய்வில் மையோனைஸ் தயாரிப்பது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ சொந்த தயாரிப்பு உணவுப் பொருளாக உள்ளதால், அதைத் தயாரித்து விற்பனை செய்ய மத்திய உணவுப் பாதுகாப்பு உரிமத்தை இணையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்ற பின்னரே தயாரித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டு விற்பனை செய்ய வேண்டும்.
எனவே, உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பச்சை முட்டையிலிருந்து தயாரித்த மையோனைஸை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் உணவு சம்மந்தமான புகாா்களை 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அல்லது குரல் பதிவாக, தமிழ்நாடு நுகா்வோா் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.