எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆண...
தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களைப் பயன்படுத்தி பெரிய கட்டடங்களை வடிவமைத்து கட்டிக் கொடுக்கும் ஒரு தனியாா் நிறுவனம், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்தது. இதில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக புது தில்லி, நொய்டா, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள், ஆலைகள் ஆகியவற்றில் வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இதில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆலை ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. காலை தொடங்கிய சோதனை இரவு நீண்ட நேரம் நீடித்தது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.