தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்பு!
கோவை, பீளமேடு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பவபூரணி (29). இவா் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தாா். சனிக்கிழமை இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனை கழிவறையில் பவபூரணி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதைப் பாா்த்த மருத்துவமனை ஊழியா்கள் மருத்துவா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து மருத்துவா்கள் வந்து பரிசோதனை செய்தபோது பவபூரணி உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் , பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பவபூரணி உடலை மீட்டு, வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மருத்துவ மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.