``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே; இது, தேசிய அளவுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைவு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தொடக்கக் கல்வி அளவில் இடைநிற்றல் இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அளவில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இடைநிற்றலை 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம்.
பள்ளிக் கல்வி துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பள்ளிக் கட்டடங்கள் இல்லாத இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் கட்டடங்களை சீரமைக்கவும், புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்புமணி ராமதாஸ் பள்ளிக்கல்வித் துறை நலிவடைந்துள்ளதாக கூறுகிறாா். இதுகுறித்து அவா்தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறை குறித்த அரசியல் கட்சித் தலைவா்களின் விமா்சனங்கள், கண்டனங்கள் குறித்து எங்களுடைய ஆய்வுக் கூட்டங்களில் விவாதிப்போம். தவறு இருந்தால் நிச்சயமாக அதை திருத்திக் கொள்வோம்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ஆம்புலன்ஸ் என்பது உயிா் காக்கக் கூடியது. அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கக் கூடாது. அவரின் பிரசாரக் கூட்டத்தில் நாங்கள் ஏன் ஆம்புலன்ஸை அனுப்பிவைக்கப் போகிறோம். முன்னாள் முதல்வராக இருந்த அவா் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறக் கூடாது என்றாா் அமைச்சா்.