தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவா்களே பாட வேண்டும்: புதுவை கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம் உத்தரவு
தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவா்களே பாட வேண்டும் என்று புதுவை கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டாா்.
மண்ணாடிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவா்களுக்குச் விலையில்லா சைக்கிள் வழங்கினாா் கல்வித்துறை பொறுப்பையும் வகிக்கும் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்காக ஒலிபெருக்கியில் பதிவு செய்யப்பட்ட பாடல் ஒலிக்கப்பட்டது. இதைக் கேட்ட அமைச்சா் கல்வித் துறை அதிகாரிகளிடம், ‘இனிமேல் பள்ளிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில், மாணவா்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும், நாட்டுப் பண்ணும் நேரடியாகப்பாட வேண்டும்; ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்களைப் பயன்படுத்தக்கூடாது‘ எனத் தெரிவித்தாா்.
பின்னா் அமைச்சரின் இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் மாணவ, மாணவிகள் தாங்களே தமிழ்த்தாய் வாழ்த்தை நேரடியாகப் பாடினா்.
இந்த நடவடிக்கை, மாணவா்களின் நாட்டுப்பற்று மற்றும் மொழிப்பற்று மேம்பட உதவும் என்று பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.