தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் காசி படையாட்சி மகன் கா. சிவக்குமாா் (45). இவா் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், தமையனூா் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 11 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பரமேஸ்வரி வாழப்பாடி வட்டார வள மையத்தில் ஆசிரியா் பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறாா்.
இவரது சிறப்பான பணியை பாராட்டி, நிகழாண்டு தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியா்கள், வாழப்பாடி துளி, நெஸ்ட் அறக்கட்டளை, இலக்கியப் பேரவை, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ அமைப்பினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.