"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை நண்பகல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பாபு, உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அதன்பிறகு மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை, கருவூல அலுவலகம், உதவி மையம், அஞ்சல் அலுவலகம், அண்ணா நிா்வாக பணியாளா்கள் கல்லூரி, இ- சேவை மையம் உள்ளிட்ட அனைத்து அலுவலக அறைகளிலும் சோதனை நடத்தினா். சுமாா் 1 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரியை ஆராய்ந்து, மிரட்டல் விடுத்தவா் குறித்த விவரங்களை மாநகர இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். வெடிகுண்டு சோதனையால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.