"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது அங்கே செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.

மேலும், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் தனது அறிக்கையில், "பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் மீது தொடர் அடக்குமுறைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினரின் அடாவடி செயலை தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் வன்மையாகக் கண்டிக்கிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் மே தின பூங்காவில் பேச்சுவார்த்தைக்காக ஒன்று கூடிய பொழுது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.
இதனை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், ஊடக ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை வலுக்கட்டாயமாக இழுத்து காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக மோசமான அணுகுமுறையை காவல்துறை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது கையாண்டு வருகிறது.
செய்தி களத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல்களை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நாளுக்கு நாள் இதுபோன்று அதிகரித்து வரும் சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.
எனவே தமிழக முதல்வர், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் கேட்டுக்கொள்கிறது" வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது அறிக்கையில், "சென்னை மே தின பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் ஒன்று கூடி உள்ளனர். இது தொடர்பாக செய்தி சேகரிக்க பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.
அங்கு வந்த காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றியுள்ளனர்.
இந்த நிகழ்வை படம் பிடிக்கச் சென்ற ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுப்பதுடன் அவர்களைத் தள்ளிவிட்டு தாக்குவதற்கு முற்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து அங்கு பணியில் இருந்த இணை ஆணையர் விஜயகுமாரிடம் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், விஜயகுமார் பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக பேசியதுடன் தொடர்ந்து செய்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பத்திரிகையாளர்களைக் கைது செய்வேன் என்று மிரட்டி உள்ளார்.
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை மிரட்டியதுடன் தாக்குவதற்கு முயன்ற காவல்துறையின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. pic.twitter.com/3v5Oh2rI9d
— Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) September 4, 2025
பொது இடத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வை படம் பிடிப்பதும், ஒளிப்பதிவு செய்வதும், செய்தி சேகரிப்பதும் பத்திரிகையாளர்களின் உரிமை. இதைத் தடுப்பது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வகுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகரமாக உள்ளது.
பத்திரிகையாளர்களிடம் அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறையினரை சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இனி இதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது என்பதை காவல்துறை தலைமை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்திருக்கிறது.