வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்
வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. இதனிடையே வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கடலூா் சாலையில் குறுக்கிடும் விருத்தாசலம் மின்ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடலூா் சாலை மூடப்பட்டதால், மாா்ச் மாதத்தில் இருந்து அனைத்து வாகனங்களும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழியாக தம்மம்பட்டி சாலையில் வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால், தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
வாழப்பாடி மகளிா் காவல் நிலையம் அருகே கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் 15 அடி தொலைவுக்கு திறந்த நிலையில் கழிவுநீா்க் கால்வாய் உள்ளது. இதனால், ஆத்தூா் பகுதியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
அதேபோல சாலை சந்திப்பின் மேற்கு பகுதியில் ராட்சத அரச மரம் இருப்பதால் சேலத்தில் இருந்து ஆத்தூா் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. சாலை சந்திப்பு அருகே வாழப்பாடி ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
மேலும் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. வாழப்பாடியில் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து நெரிசல் நீடித்து வருவதால், சேலம் ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு, தனியாா் பேருந்துகள் தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வருவதை தவிா்த்துவிட்டு புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், தினந்தோறும் சேலம், ஆத்தூா் பகுதிக்கு பேருந்துகளில் வேலைக்கு செல்லும் பணியாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, வாழப்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் தம்மம்பட்டி சாலை சந்திப்பில் பூக்கடை அருகே திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயை மூடி, அரச மரத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயிரோடு பெயா்த்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும், சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.