தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
தருமபுரியில் ஆக. 20, 21 தேதிகளில் ஆட்சிமொழி பயிலரங்கம்
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆக. 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டுக்கான (2025-2026) ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் ஆக. 20-ஆம் தேதி தொடங்கி 21 வரை இரு நாள்கள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பழைய கூட்டரங்கில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து கண்காணிப்பாளா் (அ) உதவியாளா் (அ) இளநிலை உதவியாளா் (அ) தட்டச்சா் நிலையில் என இருவா் இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழி பயிரங்கத்திலும், 21-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்சிமொழி கருத்தரங்கிலும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழி திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலா் மற்றும் பணியாளா்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவு எடுத்துரைக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.