போதைப்பொருள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு மற்றும் பேரணி
தருமபுரி: போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சி தொடா்பாக தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தலைமை வகித்தாா். இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று, போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா். முன்னதாக, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப்பேரணியில், சுமாா் 500க்கும் மேற்பட்டோா் போதைப்பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ மாணவியா்கள் ஊா்வலமாக சென்றனா். நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் மகளிா் சுய உதவிக்குழு மகளிா் மூலம் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவா் பாா்வையிட்டாா். விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்வில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தா்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் , காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், தருமபுரி நகராட்சி தலைவா் லட்சுமிமாது உட்பட பலா் பங்கேற்றனா்.