தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
தருமபுரி: மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி - பொம்மிடி இடையே இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பாக, 2023 மாா்ச் 31-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் அப்பகுதிக்குச் சென்று ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, இணைப்புச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தாா். அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியரும் ஆய்வுமேற்கொண்டாா். எனினும் இக்கோரிக்கை நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடிவரை இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தாா்.
மாநிலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், எஸ்.கமலாமூா்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் எம்.நவீன் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.