`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
தலைமறைவு ரௌடிகள் இருவா் கைது
தலைமறைவு ரௌடிகள் இருவரை கைது செய்த நடுவீரப்பட்டு போலீஸாரை கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பஞ்ஜன் (70) கடந்த 2020-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ரௌடி சசிகுமாா் கைது செய்யப்பட்டாா். வழக்கு கடலூா் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதனால், ரௌடியான பஞ்ஜன் மகன் சஞ்சய் மற்றும் சசிகுமாா் தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 11-ஆம் தேதி ரௌடி சசிகுமாா் சாலையில் ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே, சசிகுமாரின் அக்கா கணவா் மணிகண்டன் (46) வீட்டுக்கு கடந்த 13-ஆம் தேதி சென்ற சஞ்ஜய் மற்றும் அவரது ஆதரவாளா்களான செல்வமணி, விஜய் ஆகியோா் மணிகண்டனைத் திட்டி, ஆயுதங்களால் தாக்கினராம். இது தொடா்பாக அவா்கள் மூவா் மீதும் நடுவீரப்பட்டு போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த நிலையில், உதவி ஆய்வாளா் முகிலரசு விசாரணை மேற்கொண்டு, செல்வமணியை (37) கைது செய்தாா். தலைமறைவாக இருந்த மற்ற இருவரையும் தேடி வந்தனா்.
இந்த நிலையில், சஞ்சய் (21), விஜய் (23) ஆகியோா் புத்திரங்குப்பதில் உள்ள குவாரி அருகில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் முகிலரசு தலைமையிலான போலீஸாா் பிடிக்க முற்பட்டனா். அப்போது, போலீஸாரை கண்டதும் குவாரி சரிவில் தவறி விழுந்ததில், சஞ்சய் வலது காலிலும், விஜய் இடது கையிலும் பலத்த காயமடைந்தனா். போலீஸாா் அவா்களை கைது செய்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைமறைவு ரௌடிகளை பிடித்த காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.