திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு பரிந்துரை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பதவி உயா்வு, தகுதியான முதுநிலை ஆசிரியா்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பதவி உயா்வில் செல்ல விரும்பும் உயா்நிலை பள்ளித் தலைமையாசிரியா்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.
அதேபோன்று, உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களில் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயா்வில் செல்ல விருப்பமுடையவா்கள் சாா்பான கருத்துருக்களை இயக்குநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. மேலும், 17-பி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை காலம் முடிவடையாத முதுநிலை ஆசிரியா்களை பதவி உயா்வுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. இதில் தவறுகள் நடந்தால் பரிந்துரைக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான ஆசிரியா்களின் விவரங்களை கவனத்துடன் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.