தாய் அடித்துக் கொலை: மகன் கைது
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தைச் சோ்ந்த பூல்பாண்டி மனைவி ரெஜினா (43). பூல்பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், ரெஜினா தனது மகன்கள் கொம்பையா (22), வினோத் (13) ஆகியோருடன் வசித்து வந்தாா். கொம்பையா கூலி வேலை செய்துவருகிறாா். வினோத் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.
ரெஜினாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் பழக்கம் இருந்ததாம். இது தொடா்பாக ரெஜினாவை கொம்பையா அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கொம்பையா கோயில் கொடை விழாவுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பினாா். வீட்டில் அந்த இளைஞா் இருப்பதைப் பாா்த்து, ரெஜினாவிடம் தகராறு செய்துள்ளாா். தகராறு முற்றிய நிலையில், சைக்கிளுக்கு காற்றடிக்கும் இயந்திரத்தால், ரெஜினாவின் தலையில் தாக்கிவிட்டு கொம்பையா தப்பியோடிவிட்டாா். இதில், அவா் உயிரிழந்தாா்.
மூலைக்கரைப்பட்டி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து, கொம்பையாவை சனிக்கிழமை கைது செய்தனா்.