Prostate cancer: ஜோ பைடனை பாதித்த புற்றுநோய்; வயதான எல்லா ஆண்களுக்குமே வருமா?!
தாழக்குடி மடையை சீரமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி வீரகேரளப்பநேரி தெற்கு மடை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினாா்.
பின்னா் அவா் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்கு முன் வீரகேரளப்பநேரி குளத்திலிருந்து வரும் தண்ணீா் நேரடியாக தெற்கு மடை வழியாக பாசனத்திற்கு சென்று வந்தது. இதன் மூலம் தாழக்குடி பகுதியிலுள்ள 1,200 ஏக்கா் பாசன நிலங்கள் பயன் பெற்று வந்தன. அதன் பின் தெற்கு மடையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பிறகு விவசாயிகள் மாற்றுப்பாதையில் மறுகால் வழியாக தண்ணீரை பாசனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு மடையை திறக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தாழக்குடி ஊா் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றுகூடி முடிவெடுத்து இப்பணியை மேற்கொண்டு வருகிறாா்கள் என்றாா் அவா்.

தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் முத்துக்குமாா், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சாந்தினி பகவதியப்பன், தாழக்குடி பேரூா் செயலாளா் பிரம்மநாயகம், தாழக்குடி முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரோகிணி, தாழக்குடி முன்னாள் பேரூா் அதிமுக செயலாளா் அய்யப்பன், விவசாயிகள் ஒளவையாா், குமாா், அழகப்பன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.