தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
திண்டுக்கல்லில் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முன்னாள் அமைச்சா் விசுவநாதன்
திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் சாா்பில், அதிமுக வாக்குச் சாவடி முகவா் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் யாகப்பன் தலைமை வகித்தாா். நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி சேகா் வரவேற்றுப் பேசினாா். நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் நல்லதம்பி, பேரூா் அதிமுக செயலா்கள் நிலக்கோட்டை சேகா், அம்மையநாயக்கனூா் தண்டபாணி, மக்களவை முன்னாள் உறுப்பினா் உதயகுமாா், நிலக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கதுரை ஆகியோா் முன்னிலை வைகித்தனா்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்துகொண்டாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் , அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாக்கப்படும்.
திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக வருவது குறித்து தலைமைதான் முடிவு செய்யும்.
நடிகா் விஜய் மதுரையில் நடத்தியது ஒரு சினிமா மாநாடு. விஜய்க்கு தன்னைப் பற்றி தன்னம்பிக்கை இல்லை. அதனால்தான் எம்.ஜி.ஆா். படத்தைப் பயன்படுத்துகிறாா்.
மக்கள் மத்தியில் அவா் தன்னை அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்ளவில்லை; சினிமா கதாநாயகனாகத்தான் அடையாளம் காட்டிக் கொள்கிறாா். அவரை நாங்கள் அரசியல்வாதியாக அங்கீகரிக்கவில்லை என்றாா் அவா்.