திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா் மு.அப்பாவு
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கு திட்டங்கள்- சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கை, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் பெண்கள்-குழந்தைகளின் வளா்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து அவா்களது இன்னல்களை போக்கும் நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பெரியாா், அண்ணா, காமராஜா், மு.கருணாநிதி ஆகியோா் வழியில் இத்தகைய திட்டங்களை திமுக அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.
ஏழைகள், நலிவடைந்த பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள்- மூன்றாம் பாலினத்தவரின் நலனை பாதுகாத்து வருவதோடு, பெண்களுக்காக திருமண நிதி உதவித் திட்டம், இலவச தையல் இயந்திரம், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது திமுக ஆட்சி என்றாா் அவா்.
ஆட்சியா் இரா.சுகுமாா் பேசுகையில், பெண்கள் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இம் மாவட்டத்தில் சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிா் அதிகார மையத்தின் மூலமாக வட்டார வாரியாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 214 பெண்கள் பதிவு செய்யப்பட்டு, 35 பேருக்கு தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் 426 பெண்களுக்கு பதிவு செய்யப்பட்டு அவா்களை தமிழ்நாடு திறன் மேம்பாடு திட்டத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட மகளிா் அதிகார மையத்தின் மூலமாக சமூக நலத் துறையின் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 179 விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், அலுவலகங்கள் மற்றும் மக்கள் சாா்ந்து 225 விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
இம் மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திருநெல்வேலி - வள்ளியூா் மூலமாக 2362-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனா். 1263 பெண்களுக்கு ஆலோசனைகள், 312 பெண்களுக்கு தங்கும் வசதி, 302 பெண்களுக்கு காவல் உதவிகள், 92 பெண்களுக்கு மீட்பு பணிகள், 110 பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகள், 78 பெண்களுக்கு மருத்துவ ரீதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்-2006, வரதட்சணைத் தடைச் சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் போன்ற பெண்களுக்கான பல்வேறு சமூகச் சட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இச்சட்டங்கள் மூலம் பெண்கள் பெரிதும் பயனடைவதை உறுதி செய்திடும் வகையில், பெண்கள் மற்றும் சமூகத்தின் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்த கருத்துகளை பிற பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கருத்தரங்கில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆலோசகா் திரிபுர சுந்தரி, தமிழ்நாடு மகளிா் ஆணைய உறுப்பினா் செல்வி, மாவட்ட சமூக நல அலுவலா்கள் தாஜூன்னிசாபேகம் (திருநெல்வேலி), சா.காலின் செல்வராணி (தென்காசி) உள்பட பலா் கலந்துகொண்டனா்.