அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மதபோதகா் காட்பிரே நோபிள் என்பவரைத் தாக்கியதாக, திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேருக்கு எதிராக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், காட்பிரே நோபிள் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டு நவம்பா் முதல் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா்களாகப் பணியாற்றியவா்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா்கள் இருவா் ஆஜராகி, இந்த வழக்கில், உயா்நீதிமன்றம் தடை விதித்ததால் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அழைப்பாணை வழங்கவில்லை என விளக்கம் அளித்தனா். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மதபோதகா் காட்பிரே நோபிள், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறினாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவ. 4-ஆம் தேதி திருநெல்வேலி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஆனால், கடந்த 25-ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அழைப்பாணை வழங்கியுள்ளனா். உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே, போலீஸாா் அழைப்பாணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.
போலீஸாா் பெரும்பாலும் விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கின்றனா். இதனால், தாங்கள் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.
போலீஸாா் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனா். இதனால், போலீஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனா். போலீஸாா் முழு ஒத்துழைப்பு வழங்காததால், வழக்கு விசாரணை காலதாமதம் ஆகிறது. இதனால், நீதிமன்றம் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருகின்றனா். இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உரிய காலத்தில் அழைப்பாணை வழங்காத பாளையங்கோட்டையின் அப்போதைய காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் மீது டிஜிபி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடா்பான அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கைப் பதிவு செய்வது, விசாரணையை குறித்த காலத்துக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, அழைப்பாணை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் காவல் ஆய்வாளா்களுக்கும் தகுந்த உத்தரவுகளுடன் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். ஞானதிரவியம் உள்ளிட்டோா் வரும் செப். 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவா்களுக்கு எதிராக திருநெல்வேலி நீதிமன்றம் பிடிஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து நெல்லை நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.