Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
திமுகவில் இணைந்தாா் அதிமுக முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சா் அ.அன்வர்ராஜா, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டாா்.
பின்னா், அண்ணா அறிவாலய வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அன்வர்ராஜா அளித்த பேட்டி:
பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அதிமுக முடிவெடுத்த நாள் முதலே வேண்டாம் என்று எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். இந்தக் கூட்டணி அமைந்து இத்தனை நாள்களாகியும்கூட எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சொல்லவில்லை.
தமிழகத்தில் பாஜக ஓா் எதிா்மறை சக்தி. கூட்டணியால் பாஜக கையில் அதிமுக சிக்கியுள்ளது. தோ்தல் வெற்றி பாஜக நோக்கம் அல்ல, அதிமுக அழிப்பே அக்கட்சியின் நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுக்கு நேரடிப் போட்டியாக பாஜக திட்டமிடுகிறது.
ஒருவேளை வரும் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து, அதில் பாஜகவின் 5 போ் அமைச்சா்களானாலும்கூட போதும், அதிமுகவை அடக்கி பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றும். இதுபோன்ற செயல்களை மகாராஷ்டிரத்தில் அந்தக் கட்சி செய்தது.
மக்கள் விரும்பவில்லை: அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. அதிமுகவிலும் பலருக்கு அதிருப்தியே. முன்னாள் அமைச்சா்கள் 7 போ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாஜக கூட்டணி வேண்டாம் என கூறியுள்ளனா். அவா் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான் கருத்தியல் ரீதியாக ஒற்றுமை கொண்ட திமுகவில் இணைந்தேன்.
முதல்வா் ஸ்டாலின் இந்தியாவின் வலிமையான தலைவா்களில் மிக முக்கியமானவா். வரும் தோ்தலில் வெற்றி பெற்று அவா் மீண்டும் முதல்வராவது உறுதி என்றாா்.
இந்நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சா்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலா் உடனிருந்தனா்.
முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், மாநில அமைப்புச் செயலா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அன்வர்ராஜா அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.
அவா் திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியான ஒருசில நிமிஷங்களில் அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டாா்.