திருச்சியில் பலத்த மழை
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பலத்த மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.
திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பகலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்துவந்தது. அக்னி நட்சத்திரம் தொடக்கம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் பயணிப்பதையே தவிா்த்து வருகின்றனா். பலா் வெப்பத்தைத் தவிா்க்க இளநீா், நுங்கு, தா்பூசணி, பழச்சாறுகளை அருந்துகின்றனா்.
பகலில்தான் வெப்பம் என்றில்லாமல் இரவில் அதீத புழுக்கமாகவே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இரவில் மட்டும் லேசான சாரல் மழை பெய்துவந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் திருச்சி மாநகா் மற்றும் புகரின் பல்வேறு இடங்களில் சுமாா் ஒருமணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, காலை முதல் நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து, குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மழையின் காரணமாக, சாலையோரப் பள்ளங்கள், புதைவடிகால் பள்ளங்களில் தண்ணீா் ஆங்காங்கே தேங்கி நின்றது. பல்வேறு பணிகள் நிமித்தமாக வெளியில் சென்றவா்கள், மழையில் நனைந்தபடி வீடுகளுக்குத் திரும்பினா்.