நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி த...
திருச்செந்தூர்: தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர் மூச்சுத் திணறி உயிரிழப்பு... என்ன நடந்தது?
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத்தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, விசேச மற்றும் திருவிழா நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். இக்கோயிலில் பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் விரைவு தரிசனக் கட்டணம் ஆகிய இரண்டு வரிசைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று (16-ம் தேதி) விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவர், குடும்ப உறுப்பினர்களுடன் 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்துள்ளார்.
தங்கத்தேர் அருகில் வரிசையில் பக்தர்கள் நகர்ந்து வந்து கொண்டிருந்தபோது, ஓம்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து வரிசையில் நின்ற பக்தர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ஓம்குமாருக்கு ஏற்கெனவே ரத்த அழுத்த நோயும் இருந்து வந்துள்ளது. அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். ஓம்குமாருக்கு மலர்விழி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உடன் வந்த ஓம்குமார் குடும்பத்தினர் அவரது உடலை கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தினைப் பதிவு செய்துள்ளார். அதில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலி. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்கு உரியது. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இன்றி பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்த போது, திருப்பதி கோயிலை சுட்டிக்காட்டி அலட்சியமாக பதில் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பக்தரின் உயிரிழப்பிற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?
கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பக்தர்களிடம் பேசினோம், ``100 ரூபாய் கட்டண வரிசை ஒரே வரிசையாக உள்ளது. வரிசைக்குள் நுழைந்தால் சுவாமி தரிசனம் முடித்த பிறகே கோயிலை விட்டு வெளியே வர முடியும். இடைவெளி கிடையாது. ரூ.100 கட்டண தரிசனத்தில் இந்த நிலை என்றால் பொது தரிசனம் சொல்வோரின் நிலைமையை நினைத்து பாருங்கள், நீண்ட நேரம் வரிசைக்காக புதிய கட்டடங்களை கட்டியுள்ளனர். அதன் பின்னர் கம்பி வலை வழியாக வர வேண்டும். கட்டடத்துக்குள் கூட்டத்தை அனுப்புவதோடு சரி, உள்ளே ஏற்படும் நெரிசல்களை பற்றி இவர்கள் யோசிப்பதில்லை. பக்தர்களின் எண்ணிக்கைக் கேற்ப போதிய இடைவெளி விட்டு கேட் அமைத்து திறந்து விடலாம். இதனால் நெரிசலில் சிக்கித் தவிர்க்கும் நிலை இருக்காது. அவசரத்துக்கு வெளியே வரமுடியாத சூழல் உள்ளது.
பொது தரிசன கட்டடத்தை விட்டு வெளியே வரும் போது கம்பி வலைக்குள் வரிசையில் செல்ல வேண்டும். இங்கே நெரிசல் ஏற்படும் போது நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கும்.
திட்டமிட்டு செலவு செய்து கட்டங்களை கட்டினால் மட்டும் போதாது, பக்தர்கள் மீது அக்கறை கொண்டு வரிசையை ஒழுங்குபடுத்தி கையாள வேண்டும். இதனால் கூட்டத்தில் குழப்பம், நெரிசல், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். அதிகாரிகள் அலட்சியமாக இருக்காமல் இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குறைந்தது 50 அடிக்கு ஒரு இடைவெளி விட வேண்டும். இப்படி இடைவெளி இருந்தால் மூச்சுத்திணறல், மயக்கத்தால் பாதிக்கப்படும் பக்தரை தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்க முடியும். உயிரிழப்பை தவிர்க்கலாம். அதே நேரத்தில் கோயிலில் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் கிடையாது. கோயில் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நிறுத்தப்பட வேண்டும்” என்றனர்.

திருக்கோயில் நிர்வாகத் தரப்பில் பேசினோம், “100 ரூபாய் கட்டண வரிசையில் கூட்ட நெரிசல் கிடையாது. ஒருவர் பின் ஒருவராகத்தான் செல்ல முடியும். முந்தியடித்துச் செல்ல வாய்ப்பில்லை. பக்தர் ஒருவர் சுவாமி தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்த நேரத்தில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது வருந்தத்தக்கதுதான். அவருக்கு ஆஸ்துமா மற்றும் ரத்த அழுத்தம் இருந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். கூட்ட நெரிசலால் அவர் உயிரிழக்கவில்லை” என்றனர்.