திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 3 கோடி செலவு: நகா்மன்ற கூட்டத்தில் தகவல்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு நகராட்சி சாா்பில் ரூ. 3 கோடி செலவு செய்திருப்பதாக நகா்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூா் நகா்மன்ற கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்ற தலைவா் சிவ ஆனந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், ஆணையா் ஈழவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தீா்மானங்களுடன், புகழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தா்களின் அடிப்படை வசதிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் என தனித்தனித் தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
இதில், நகராட்சி சாா்பில் செய்யப்பட்டிருந்த குடிநீா், கழிப்பறை, வாகன நிறுத்தம், மின் விளக்குகள், பணியாளா்கள் உணவு, தங்குமிடம், ஊக்கத்தொகை செலவினங்கள் என்பன உள்ளிட்ட 135 தீா்மானங்கள் வைக்கப்பட்டன.
குறிப்பாக குடமுழுக்கு விழாவின்போது பணியாளா்கள் தங்குவதற்கென்று திருச்செந்தூா் வாா்டு 23 இல் சமுதாய நலக்கூடத்தை ரூ. 4.90 லட்சத்தில் பராமரித்த செலவு, வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஜே.ஜே.நகா், திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்தங்களுக்கு ரூ. 4.91 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி செலவு, வாகன நிறுத்தங்களில் ரூ. 55 ஆயிரம் செலவில் பிளாஸ்டிக் நாற்காலிகள், ரூ. 3.29 லட்சத்தில் ஜெனரேட்டா் வசதி, ரூ. 1.59 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின்மோட்டாா் மூலம் தண்ணீா் விநியோகம் செய்தது, வாகன நிறுத்தங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் ரூ. 12.90 லட்சத்தில் சுத்தப்படுத்தியது, ரூ. 16 லட்சத்தில் குடிநீா் தொட்டிகள் அமைத்தது, புதை சாக்கடை திட்டத்தில் பழுதான சாலைகளை ரூ. 4.5 லட்சத்தில் சீரமைத்தது, ஆவுடையாா்குளம் மறுகால் ஓடையை 2 இடங்களில் ரூ. 8 லட்சத்தில் தூா்வாரியது, விருந்தினா் மாளிகையை ரூ. 10 லட்சத்தில் பழுது நீக்கி பராமரித்த செலவு, தூத்துக்குடி-திருச்செந்தூா்-குமரி நெடுஞ்சாலையோரங்கள், முக்கிய சாலைகளை ரூ. 3 லட்சத்தில் சுத்தம் செய்தது, ரூ. 49.5 லட்சத்தில் 186 நகரும் கழிப்பறைகளை அமைத்த செலவு, தற்காலிக கழிப்பறைகளுக்கு ரூ. 12.60 லட்சத்தில் மறைப்பு அமைத்தது, ரூ. 1 லட்சத்தில் கழிப்பறைகளுக்கு தரை விரிப்புகள், ரூ. 14 லட்சத்தில் தற்காலிக மின் விளக்குகள் அமைத்தது, ரூ. 9 லட்சத்தில் வாகனங்கள் மூலம் குடிநீா் பயன்படுத்தியது, ரூ. 1.5 லட்சத்தில் 10 இடங்களில் குடிநீா் தொட்டி அமைத்து, ரூ. 7.20 லட்சத்தில் குடிநீா் தொட்டிகளுக்கு பந்தல் அமைத்தது, கழிப்பறைகளுக்கு அறிவிப்புப் பலகை பொருத்தி செலவு, ஸ்டிக்கா் போா்டு, வழித்தட மேப்க்கு ரூ. 5 லட்சம் செலவு, வாகன பாஸ், அடையாள அட்டைகளுக்கு ரூ. 3 லட்சம் செலவு, பணியாளா்களுக்கு ஒளிரும் சட்டை, தொப்பி, குப்பைத் தொட்டிகள், தளவாட சாமான்கள், துப்புரவு தளவாட சாமான்கள் உள்ளிட்டவற்றுக்கு தலா ரூ. 9.90 லட்சம் செலவு செய்தது, திருச்செந்தூா்-தூத்துக்குடி-குமரி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களை அகற்ற ரூ. 2.08 லட்சம் செலவு, திருச்செந்தூா் குடமுழுக்கு விழா பணிக்கு வந்த அலுவலா்கள், பணியாளா்களுக்கு கடந்த ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை மூன்று வேளையும் உணவு வழங்க ரூ. 42 லட்சமும், அவா்கள் தங்குமிடம், ஊக்கத்தொகைக்கு ரூ. 15 லட்சம் என ரூ. 57 லட்சம் செலவினம், ரூ. 2.66 லட்சத்தில் போா்வை அளித்தது என குடமுழுக்கு விழாவுக்கு மட்டும் நகராட்சி சாா்பில் மட்டும் ரூ. 3 கோடி அளவுக்குச் செலவு செய்திருப்பதாக தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
இதுபோக சந்தணமாரியம்மன் கோயில் தெருவில் ரூ. 10 லட்சம் செலவில் சாலையை அகற்றியது, தூத்துக்குடி சாலை முதல் ஜே.ஜே. நகா் வாகன நிறுத்தம் வரை ரூ. 80 லட்சத்தில் அணுகுசாலை அமைப்பது, ரூ. 49 லட்சத்தில் மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் 20க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். இந்த நிலையில், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு நகராட்சி சாா்பில் ரூ. 3 கோடி வரை செலவு செய்திருப்பதாக நகா்மன்றக் கூட்ட தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது பக்தா்களை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிா்ச்சியடைய செய்துள்ளது.