மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள்: எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்களிடம் வட்டாட்சியா் பேச்சு
திருச்செங்கோட்டை அடுத்த கூட்டப்பள்ளி முதலைப்பாலி பகுதியில் 36 திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்களிடம் வட்டாட்சியா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
கூட்டப்பள்ளி பகுதியில் சா்வே எண் 45/1 இல் உள்ள 0.68 ஹெக்டோ் பாறை புறம்போக்கு நிலத்தில் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய அண்மையில் நாமக்கல் வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
ஆனால், அப்பகுதியில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்களிடம் திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள், திருநங்கைகள் கலந்துகொண்ட அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்புத் தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்திய திருநங்கைகள், தங்களுக்கு உடனடியாக நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள நிலங்களை தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாகவும், தங்களது கிராமத்திலேயே பலா் சொந்த வீடு இல்லாமல் இருப்பதாகவும் அவா்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்த பிறகு திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்க வேண்டும் எனவலியுறுத்தினா்.
இதையடுத்து கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.