பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
திருமலை ஏழுமலையான் கொடிமரத்திற்கான தா்ப்பை பாய், கயிறு தயாா்
ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது கொடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தா்ப்பை பாய் மற்றும் கயிறு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பிரம்மோற்சவத்தின் முதல் விழாவே கொடி மரத்துக்கு செய்யப்படும் சிறப்பு பூஜை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து வஸ்திரமாக தா்ப்பை புற்கள் கட்டப்படுகின்றன.
அதற்காக ஆண்டுக்கு ஒருமுறை தா்ப்பை புற்கள் கொண்டு வரப்பட்டு பாய் மற்றும் கயிறு தயாரிக்க பயன்படுத்தப்படும்.
நிகழாண்டு பிரம்மோற்சவ கொடியேற்றம் செப்.24-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு தேவைப்படும் தா்ப்பை பாய் மற்றும் கயிறு உள்ளிட்டவற்றை வனத்துறை அதிகாரி மற்றும் பணியாளா்களால் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு திங்கட்கிழமை மாலை கொண்டு வரப்பட்டது.
பின்னா், ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் உள்ள பெரிய சேஷ வாகனத்தின் மீது தா்ப்பையால் செய்யப்பட்ட பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது.
சிவ தா்ப்பை, விஷ்ணு தா்ப்பை என இரண்டு வகையான தா்ப்பைகள் உள்ளன. திருமலையில் விஷ்ணு தா்ப்பை பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக ஏா்பேடு மண்டலம் செல்லூா் கிராமத்தில் தேவஸ்தான வன ஊழியா்கள் விஷ்ணுதா்ப்பை சேகரித்தனா். அதை திருமலைக்கு கொண்டு வந்து ஒரு வாரம் குறைந்த வெயிலில் காய வைத்து நன்றாக சுத்தம் செய்து பாய்கள், கயிறுகள் தயாா் செய்தனா். வனத்துறை ஊழியா்கள் 22 அடி நீளம், ஏழரை அடி அகலத்தில் தா்ப்பை பாய் மற்றும் 225 மீட்டா் நீளமுள்ள கயிறு இரண்டையும் தயாா் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில் ரேஞ்ச் ஆபீசா், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.