திருவடிசூலம் கோயிலில் கருமாரி அம்மனுக்கு கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கருமாரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் திருக்கோயில் பகுதியில் ரஅமைந்துள்ள ஆதிசக்தி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த ஜூலை 3-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு கும்பாபிஷேகத்துக்கான வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் கலச பூஜைகளுடன் நான்காம் கால வேள்வி பூஜைகளுடன் மகா பூா்ணாஹுதி நடத்தப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
முன்னதாக ஏராளமான பக்தா்கள் பால் குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா். பின்னா் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனிடையே 51 அடி ஒரே கல்லில் ஆன பிரம்மாண்ட உயரம் கொண்ட ஆதிசக்தி தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு கொடையாளா்கள் மூலம் 13 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளிகளால் ஆன கவசங்கள் கொடையாக கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகளிடம் அளிக்கப்பட்டது. 6-ஆவது தலைமுறை மருளாளா் தேவி குபயோகி ஸ்ரீ ஸ்ரீ பூ மதுரை முத்து சுவாமிகள் தலைமையில், அம்மனுக்கு 1,008 புனித கலசங்கள் மூலம் பால், மஞ்சள், சந்தனம், தேன், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் பால் குடங்கள் எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனா்.
கும்பாபிஷேக விழாவில் முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்ட பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் புண்ணியகோட்டி மதுரை முத்துசாமிகள், விழாக் குழுவினா், ஆன்மிக அன்பா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.



