முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்
திருவானைக்கோயிலில் நாளை எட்டுத்திக்கு கொடியேற்றம்
திருவானைக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
திருவானைக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா ஏப். 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பங்குனித் தேரோட்டத்துக்காக சுவாமி சந்நிதியைச் சுற்றியுள்ள 3-ஆம் பிரகாரத்தில் அஷ்டதிக்கு திசையில் (எட்டுத்திக்கு) நடப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெற உள்ளது. அப்போது சுவாமியும், அம்மனும் எழுந்தருளுவா். மாலை 6 மணியளவில் ஏகசிம்மாசனத்தில் சோமாஸ்கந்தருடன் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு 4-ஆம் பிரகாரத்தை வலம்வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். 2-ஆம் நாளான 26-ஆம் தேதி புதன்கிழமை சுவாமி சூரிய பிரபையிலும், அம்மன் சந்திரபிரபையிலும், 3-ஆம் நாளான 27-ஆம் தேதி வியாழக்கிழமை சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4-ஆம் நாளான 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5-ஆம் நாளான சனிக்கிழமை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பனை ஓலைகளால் வேயப்பட்ட சப்பரத்தில் தனித்தனியாக எழுந்தருளி தெருவடைச்சானாக 4-ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். முக்கிய நிகழ்ச்சியான 6-ஆம் நாளான பங்குனித் தேரோட்டம் காலை 7.20-க்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி பெரிய தோ்களில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.