தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: அண்ணாமலை
தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
பாஜக சாா்பில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி மன்னாா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில பொதுச்செயலாளா் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், கே. அண்ணாமலை பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையில் தொடக்கக்கல்வி தாய்மொழியில்தான். நடுநிலைக் கல்வியில் ஹிந்தி கட்டாயம் என்பதை 2019 மே மாதத்தில் மாற்றி கட்டாய மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் எனக் கொண்டு வந்தாா் பிரதமா். உயா்கல்வியில் பல்வேறு மொழிகளை கற்கலாம்.
காமராஜா், கக்கன், எம்ஜிஆா் கல்விக் கொள்கை குறித்துக் கூறினால் ஏற்கலாம். சிறை சென்ற அமைச்சா்கள் கூறும் கல்விக் கொள்கையை எப்படி ஏற்க முடியும். இதற்கு எதிராக பாஜக அரசியல் புரட்சி செய்து வருகிறது.
தனியாா் பள்ளிகளுக்கு சமமாக அரசுப் பள்ளிகளில் கல்வி கிடைக்க, உலகத்தரம் வாய்ந்த கல்வி பெற, குழந்தைகளை பன்மொழி தெரிந்தவா்களாக மாற்றுவதே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம். அனைத்து தனியாா் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டும் இரு மொழிகளை மட்டுமே படிக்க வேண்டுமென்பது என்ன நியாயம்.
அனைத்துத் துறைகளிலும் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை மறைக்கவே, தொகுதி மறுசீரமைப்பை திமுக கையிலெடுத்துள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்காது. விகிதாச்சார அடிப்படையில்தான் இருக்கும் என உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளதால், எம்பி தொகுதிகள் எந்த மாநிலத்துக்கும் குறையாது, எந்த மாநிலத்துக்கும் அதிகமாகாது என்ற நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்காக உப்புசப்பில்லாத தென்மாநில ஒருங்கிணைப்புக் கூட்டத்தை திமுக நடத்தியுள்ளது. இதற்காக தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து கா்நாடகம், கேரளம், ஆந்திர முதல்வா்களை கூட்டி வந்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் சமக் கல்வி வழங்கப்படும். புதிதாக தனியாா் பள்ளிகளுக்கு அனுமதியில்லை. புதுச்சேரியைப் போல ஒரே கையொப்பத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளாக்கப்படும் என்றாா்.

ஹிந்தியைத் திணிப்பதாக திமுக பொய்ப் பிரசாரம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ தனியாா் - அரசுப் பள்ளிகளில் சமக் கல்வி வழங்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஹிந்தியைத் திணிப்பதாக பாஜகவுக்கு எதிராக திமுக பொய்ப்பிரசாரம் செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்து வரும் திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனா் என்றாா்.
பாஜக மூத்த தலைவா் எச். ராஜா பேசியதாவது: ஊழலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மகன் பிரெஞ்சு மொழி படிக்கலாம்; ஏழை அரசுப் பள்ளி மாணவா்கள் வேறுமொழி படிக்கக் கூடாதா. மொழிக்கொள்கையை வைத்து மீண்டும் ஒரு மொழிப்போரை உருவாக்க நினைக்கிறாா்கள். அது தற்போது முடியாததால், தொகுதி மறுசீரமைப்பை கையில் எடுத்துள்ளனா் என்றாா்.
அனைத்து மக்களையும் வாழவைப்பது பாஜக: முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சாமானிய மக்களும் உயா்கல்வி கற்கவே பிரதமா் மோடி தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளாா். ஆனால் திமுகவினா் ஹிந்தியைத் திணிப்பதாக பொய் தகவல் பரப்புகின்றனா். பிற மொழியை சாமானிய மக்கள் படிக்கக் கூடாது. ஆனால் செல்வந்தா்கள் மட்டும் படிக்கலாம் எனக் கூறினால், திமுக அகற்றப்படும். ஒரு குடும்பம் வாழவே திமுக, அனைத்து மக்களையும் வாழ வைப்பது பாஜக என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பேசியது: சிந்தனை ரீதியாக மழுங்கடிக்கப்பட்ட தமிழக மக்களை தட்டி எழுப்பி, திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஊழல், சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டினால் தமிழகம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தை வீழ்ச்சியிலிருந்து காக்க 2026-இல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கப்பட வேண்டும். திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்றாா்.
முன்னதாக, திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் கே. ஒண்டிமுத்து வரவேற்றாா். ஆயிரக்கணக்கான பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன் நன்றி கூறினாா்.