திருவாரூர்: ``புத்தகமே என்னை உயர்த்தியது..'' -மாணவர்களுடன் தரையில் அமர்ந்து படித்த ஆட்சியர்!
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே, 3-வது புத்தக திருவிழா நாளை தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ’திருவாரூர் வாசிக்கிறது’ என்ற விழ்ப்புணர்வு நிகழ்ச்சி நேற்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்றது. மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவர்கள் புத்தகங்கள் வாசித்து பின்னர் அது குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவாரூர், விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ’திருவாரூர் வாசிக்கிறது’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தில் மர நிழலில் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தனர்.
உடனே, சாருஸ்ரீயும் மாணவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்தார். அப்போது, எல்லா வகையான புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகம் படித்தால் பொது அறிவு வளரும், அது நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவும். புத்தகமே என்னை மாவட்ட ஆட்சியராக உயர்த்தியது. என்னை போல் நீங்களும் புத்தகம் படித்து மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என உற்சாகப்படுத்தினார். பத்து நிமிடத்திற்கு மேல் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசி கொண்டிருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய ஆசிரியர்கள் சிலர், "அரசுப்பள்ளிகளில் எந்த முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென சாருஸ்ரீ ஆய்வுக்கு செல்வார். பள்ளி வளாகத்தில் நுழைந்து விட்டால் மாவட்ட ஆட்சியராக நடந்து கொள்ள மாட்டார். பள்ளியில் படிக்கின்ற மாணவராக மாறி விடுவார். மாணவர்களிடம் சக நண்பர்களை போல் பழகுவார். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதை நிறைவேற்றி தருவார். பள்ளி மாணவர்களை எப்போதும் நேசிக்க கூடியவர். அதுவே ’திருவாரூர் வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் அவரை மாணவர்களுடன் தரையில் அமர்ந்து புத்தகம் படிக்க வைத்திருக்கிறது" என்றனர்.