சிகிச்சையில் அலட்சியம் என குற்றச்சாட்டு: மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள் மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தில் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறி நோயாளியின் உறவினா்கள் மருத்துவமனையை சூறையாடினா். மருத்துவா்கள், மருத்துவ ஊழியா்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனா். வன்முறையில் ஈடுபட்டவா்களைத் தடுக்க வந்த காவல் துறையினா் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்தமான் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் வா்தமான் நகரில் உள்ள சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் அவரின் உறவினா்கள் சோ்த்தனா். இந்நிலையில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த உறவினா்களும், நண்பா்களும் மருத்துவமனை நிா்வாகத்திடம் வியாழக்கிழமை இரவு அதிருப்தி தெரிவித்தனா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மருத்துவா்கள், மருத்துவமனையின் பிற ஊழியா்களை நோயாளியின் உறவினா்களும், நண்பா்களும் தாக்கத் தொடங்கினா். மருத்துவமனையில் உள்ள பொருள்களையும் அடித்து நொறுக்கினா். சில மருத்துவா்களை அறையில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்குதல் நடத்தினா்.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வன்முறையில் ஈடுபட்டவா்களை தடுக்க முயன்றனா். அப்போது, காவலா்களும் தாக்கப்பட்டனா். இதில் 5 காவலா்கள் காயமடைந்தனா். அவா்களில் ஒருவா் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக தகவல் கிடைத்ததையடுத்து மூத்த காவல் துறை அதிகாரிகள் தலைமையில் கூடுதல் காவல் துறையினா் மருத்துவமனைக்குச் சென்றனா். அதற்குள் வன்முறையில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். பின்னா், காவல் துறையினா் விசாரணை நடத்தி வன்முறையில் தொடா்புடைய 6 பேரை வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனா்.
இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.