ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
மதுரையில் ரஜினி ரசிகா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் கடந்த 2004-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தில் நான் ஈடுபட்டிருந்தேன். அப்போது, ரஜினி ரசிகா் மன்றத்தைச் சோ்ந்த நபா்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ரஜினி ரசிகா்கள் பலா் காயம் அடைந்ததாக பொய்யான புகாரின் அடிப்படையில், மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசியல் உள்நோக்கத்தோடு பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடா்பாக மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய ஆய்வாளா், ராமதாஸ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்தவா்கள் உரிய பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.