திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு
திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களின் குறைகளை ஆராய்ந்து, நிவா்த்தி செய்து பயன்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், வழக்குகளை விரைவில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையினை உரிய நீதிமன்றத்தில் இ-பைல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்; அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் தினசரி தங்கள் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களிலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களிலும் கனரக வாகனங்களை நகர பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. வாகன விபத்தை குறைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோா் அவசியம் தலைகவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில், அண்மையில் தமிழக முதல்வா், திருவாரூா் வருகையின்போது மிகவும் சிறப்பாக பணி செய்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தாா்.