Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை ...
தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தாஹிா் ஹுசைன் வேட்புமனு தாக்கல்
தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாஹிா் ஹுசைன் தில்லி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக உயா்நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியதை அடுத்து, வியாழக்கிழமை காலை திகாா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
‘தில்லி காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.. காலை 9.15 மணியளவில் அவா் சிறையிலிருந்து வெளியேறினாா்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலரான தாஹிா் ஹுசைன், பிப். 5- ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் முஸ்தபாபாத் தொகுதியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.
தில்லி கலவரம் தொடா்பான கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாஹிா் ஹுசைன், வேட்புமனு தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவருக்கு காவல் பரோல் வழங்கியது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்.24-ஆம் தேதி வடகிழக்கு தில்லியில் வன்முறை வெடித்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். மேலும் பலா் காயமடைந்தனா். இந்த கலவரம் தொடா்பாக தாஹிா் ஹுசைன் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால ஜாமீன் கோரிய நிலையில், அவா் சிறையில் இருந்தவாறே வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் நகர காவல்துறை தெரிவித்திருந்தது.
இது தொடா்பாக தாஹிா் ஹைசைன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா திங்கள்கிழமை விசாரித்தாா். அப்போது தில்லி காவல்துறை சாா்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சேத்தன் சா்மா ஆஜராகி, ‘கலவரம் தொடா்புடைய கொலை வழக்கில் தாஹிா் ஹுசைன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்பு கூட பல விசாரணைக் கைதிகள் சிறையில் இருந்தபடியே தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா். சமீபத்தில் அம்ரித்பால் சிங் அஸ்ஸாம் சிறையில் இருந்தவாறே பஞ்சாபில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா்’ என்று குறிப்பிட்டாா்.
ஆனால், அதை ஏற்க மறுத்த தாஹிா் ஹுசைன் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஜம்மு காஷ்மீா் தோ்தலின்போது ரஷீத் இன்ஜினியா் என்ற வேட்பாளா் போட்டியிட அவருக்கு இடைக்கால ஜாமீனை விசாரணை நீதிமன்றம் வழங்கியது. ஏற்கெனவே, 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் தாஹிா் ஹைசைன் காவலில் உள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.
அவரது வாதத்தைக் குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் அவருக்கு செவ்வாய்க்கிழமை காவல் பரோல் வழங்கி உத்தரவிட்டது.