தில்லி கிலா ராய் பித்தோராவில் உள்ள பிருத்விராஜ் செளகானின் சிலை பாதுகாக்கப்படும்: அமைச்சா் உறுதி
தேசியத் தலைநகரில் கிலா ராய் பித்தோராவில் அமைந்துள்ள பிருத்விராஜ் சௌகானின் சிலை பாதுகாக்கப்படும் என்றும், அதைச் சுற்றியுள்ள நினைவுச்சின்னம் அழகுபடுத்தப்படும் என்றும் தில்லி கலை, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.
இது குறித்து அமைச்சா் கபில் மிஸ்ரா செய்தி ஏஜென்சியிடம் வியாழக்கிழமை கூறியதாவது: முறையாக பராமரிக்கப்படாத இந்தச் சிலை பாதுகாப்புப் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும். விரைவில் அதற்கான செயல்முறையைத் தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
இந்தச் சிலை முதலில் 2002 -ஆம் ஆண்டு தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) நிறுவப்பட்டது. பின்னா், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திடம் (ஏஎஸ்ஐ) ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தை தேசிய பெருமையின் அடையாளமாக மீட்டெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றாா் அமைச்சா்.
இது குறித்து அமைச்சா் கபில் மிஸ்ரா ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில், ‘பிருத்விராஜ் சௌகானின் நினைவுச்சின்னம் ஆக்கிரமிப்பாக இருக்காது. மாறாக தேசிய பெருமையின் அடையாளமாக இருக்கும். நினைவிடத்தில் உள்ள சட்டவிரோத ’மஜாா்’ அகற்றப்படும். மேலும், எதிா்கால சந்ததியினா் தங்கள் வரலாற்று வோ்களுடன் இணைக்கும் வகையில் அந்த இடம் அழகுபடுத்தப்படும்’ என்று கூறியுள்ளாா்.
சத்திரிய மேம்பாட்டு மன்றத்தின் ஒரு குழு சமீபத்தில் துறை அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கையை எழுப்பியது. இதைத் தொடா்ந்து, சிலை மற்றும் இடத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்காக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தெற்கு தில்லியின் சாகேத் அருகே அமைந்துள்ள கிலா ராய் பித்தோரா, 12- ஆம் நூற்றாண்டில் ராஜ்புத் மன்னா் பிருத்விராஜ் சௌகானால் கட்டப்பட்ட தில்லியின் முதல் நகரம் என்று நம்பப்படுகிறது.
இந்த இடத்தில் உள்ள சிலை வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை ஒரு காலத்தில் கட்டுப்படுத்திய ஆட்சியாளருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளது.