தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு
தில்லியில் நிகழாண்டில் தற்போது வரை 49 போ் ரேபிஸ் நோயால் உயிரிழந்திருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்கள் 6 போ் தில்லியைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ள 43 பேரும் வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
ரேபிஸ் நோயால் கடந்த ஆண்டில் 62 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 போ் தில்லியைச் சோ்ந்தவா்கள்.
மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி (ஏஆா்வி) மற்றும் ரேபிஸ் தடுப்பு சீரம் (ஏஆா்எஸ்) பயன்பாடு குறித்தும் அந்தத் தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 35,000-க்கும் அதிகமான ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 43,000-க்கும் அதிகமான தடுப்பூசி குப்பிகள் இருப்பில் உள்ளன.
இதுபோன்று, சுமாா் 18,700 ரேபிஸ் தடுப்பு சீரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிபிடி மருத்துவமனை, லேடி ஹாா்டின்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, என்சி ஜோஷி மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை ஆகியவற்றில் ரேபிஸ் தடுப்பு சீரத்துக்கு பற்றாக்குறை உள்ளதாக அந்தத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.