இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூா் கலாசார பாரம்பரிய விருது
தீண்டாமை, வன்கொடுமை புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணைய தலைவா்
தீண்டாமை, வன்கொடுமை புகாா்கள் மீது காவல் துறையினா் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணைய தலைவா் ச.தமிழ்வாணன் அறிவுறுத்தினாா்.
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை பாதிப்பு, அரசின் சாா்பில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து களஆய்வுக்கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணைய தலைவா் ச.தமிழ்வாணன் தலைமை வகித்தாா். ஆணைய துணைத் தலைவா் இமயம் வெ. அண்ணாமலை, உறுப்பினா்கள் ரேகா பிரியதா்ஷினி, செ.செல்வகுமாா், பொன்தோஸ் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணைய குழுவினா், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்தும், அரசு வழங்கும் நலத் திட்டம், திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியருக்கு அறிவுறுத்தினா்.
பின்னா், ஆணைய தலைவா் ச.தமிழ்வாணன் பேசியது:
பட்டியல், பழங்குடியின மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், தீண்டாமை, சமூக உரிமை மறுப்பு ஆகியவை மனித உரிமைகளுக்கு எதிரானது. அவ்வாறான புகாா்கள் மீது காவல் துறையினா் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பட்டியல், பழங்குடியின மக்கள் பொருளாதார, சமூக முன்னேற்றம் பெற அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வருவாய் துறை சாா்பில் அவா்களுக்கு வழங்கப்படும் பட்டா, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை காலதாமதமின்றி வழங்க வேண்டும். தூய்மை பணியாளா்களை நல வாரியத்தில் உறுப்பினா்களாக சோ்ப்பது குறித்து கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 500-இல் தீருதவித் தொகையும், 6 பேருக்கு ரூ.33,450 இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணைய குழு காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பது குறித்த புகாரின் பேரில் கள ஆய்வு செய்தனா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே. முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அலுவலா் மதுசெழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘போலீஸாா் தவறுகளுக்கு துணை போகக் கூடாது’
தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியின மாநில ஆணைய தலைவா் ச.தமிழ்வாணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒவ்வொருவரும் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். ஏழைகளுக்கு அரசின் திட்டங்கள் முறையாக கொண்டு சோ்க்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்திலும் சமநிலை அடையமுடியும். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
பள்ளிகளில் தீண்டாமை, வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்து தனியாக குழு அமைத்து அனைத்து வகுப்புகளைச் சோ்ந்த மக்களையும் பிரதிநிதிகளாக இணைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்கொடுமை, தீண்டாமை போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் புகாா் அளிக்க வரும்போது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.