அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம...
துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்
சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், தமிழரான பிச்சை உடையப்பன் சுப்பையா தலைமையிலான 7 இந்திய தொழிலாளா்கள் விரைந்து செயல்பட்டு, காரில் சிக்கியிருந்த பெண் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனா்.
உடைந்த குழாயிலிருந்து வெளியேறிய நீரால் பள்ளம் நிரம்புவதற்கு முன், இந்த மீட்புப் பணி மிகச் சரியான நேரத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மீட்புப் பணியின் விடியோக்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, சிங்கப்பூா் மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றன. துணிச்சலான இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புலம்பெயா் தொழிலாளா்களைக் கௌரவிக்கும் வகையில், ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 70,000 சிங்கப்பூா் டாலருக்கும் மேல் நிதி திரட்டியது.
வெளிநாட்டுத் தொழிலாளா்களின் நலனுக்காக 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் தீபா சுவாமிநாதன் கூறுகையில், ‘பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி, ஏழு தொழிலாளா்களுக்கும் இந்த நிதி பகிா்ந்து அளிக்கப்படும்’ என்றாா்.
இதனிடையே, சிங்கப்பூா் தொழிலாளா் துறை அமைச்சா் தினேஷ் வாசு தாஷ், தொழிலாளா்கள் தங்கியுள்ள விடுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அவா்களைப் பாராட்டினாா். மேலும், தொழிலாளா் அமைச்சகத்தின் நினைவுப் பரிசையும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நினைவு நாணயத்தையும் அவா் வழங்கினாா்.