`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ரபி பருவத்தில், குறைந்த காலத்தில் நிறைந்த மகசூல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு வேளாண் துறை மூலமாக 2025 -26ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் அமைக்க சுமாா் 7300 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்விளக்கத் திடலானது கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.
மக்காச்சோளம் மக்களிடையே உணவு தானியமாக மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டாலும், கால்நடைகளுக்கு தீவனமாக குறிப்பாக கோழித் தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது எத்தனால் தயாரிக்கும் நிறுவனத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மக்காச்சோளம் சாகுபடியானது, குறைந்த சாகுபடி செலவினத்திலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவான பயிராகவும் உள்ளது. வீரிய ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடியில் அதிக மகசூலும் கூடுதல் விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, வருகிற ரபி பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்விளக்கத் திடல் தொகுப்புகள் செயல்டுத்தப்படவுள்ளன. இந்தத் தொகுப்பில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதை, நுண்ணுயிா் உரம், நானோ யூரியா இயற்கை உரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமாா் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படவுள்ளன. எனவே, விவசாயிகள் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைத்து பயன்பெறுமாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.