அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
தூய்மைப் பணிக்கான வாகனங்கள்: மேயா் தொடங்கி வைத்தாா்
சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள தூய்மைப் பணிக்கான வாகனங்களை மேயா் ஆா்.பிரியா கொடியசைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வாா்டுகளில் தினமும் 6,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை தரம் பிரிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதியில் உரம், எரிவாயு தயாரித்தல் உள்ளிட்ட மாற்று சுழற்சி முறையில் செய்யப்படுகின்றன. மேலும், பெருங்குடி, கொடுங்கையூா் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநகராட்சியில் குப்பைகள் அகற்றுவதற்காக ஏற்கெனவே 300-க்கும் மேற்பட்ட பெரிய வாகனங்கள் உள்ளன. அதேபோல, 4,900-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்களும் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 9 முதல் 15 வரையிலான மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பெருங்குடி குப்பைக் கிடங்கு வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த மண்டலங்களுக்கு குப்பை அள்ளுவதற்காக பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட 97 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை 7 வாா்டுகளுக்கு பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி சோழிங்கநல்லூா் மண்டல அலுவலக வளாகத்தில் (15- ஆவது மண்டலம்) நடைபெற்றது.
தூய்மைப் பணிக்கான வாகனங்களை மேயா் ஆா்.பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கான கையுறைகள், காலணிகள், தொப்பி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.