150 வயதில் பாலியல் முதிர்ச்சி; இன்றும் வாழும் 400 ஆண்டுகள் பழமையான சுறா; நீண்ட ஆயுள் ரகசியம் என்ன?
வட அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர்ந்த, இருண்ட பகுதியின் ஆழத்தில் வாழும் ஓர் அற்புத உயிரினம் பற்றி தான் தெரிந்துக்கொள்ளப் போகிறோம். இது உயிரினங்களில் மிக நீண்ட ஆயுள் கொண்டதாக அறியப்படுகிறது.
400 ஆண்டுகள் பழமையான சுறா!
‘சயின்ஸ்’ இதழில் வெளியான ஆய்வின்படி, விஞ்ஞானிகள் 28 கிரீன்லாந்து சுறாக்களின் வயதை ரேடியோகார்பன் டேட்டிங் முறையில் கண்டறிந்தனர். இதில் ஒரு பெண் சுறா, சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது. இது இன்று வரை உயிருடன் இருக்கிறது.

நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?
கிரீன்லாந்து சுறாக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம், அவற்றின் மெதுவான வளர்ச்சி மற்றும் பிற்கால பாலியல் முதிர்ச்சி என்று கூறுகின்றனர். இவை ஆண்டுக்கு வெறும் 1 செ.மீ. மட்டுமே வளர்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இவை தங்கள் 150 வயதில் தான் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இந்த மெதுவான வாழ்க்கை முறை, இவற்றின் உடல் மற்ற உயிரினங்களைவிட மெதுவாக வயதாகிறது.
கிரீன்லாந்து சுறாக்கள் மெதுவாக முதிர்ச்சி அடைவதால், இவை மீன்பிடிப்புக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. இன்று, கடலில் காணப்படும் பெரும்பாலான கிரீன்லாந்து சுறாக்கள் இன்னும் முதிர்ச்சி அடையாத “இளம்” சுறாக்களாக உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முன்பு, மிக நீண்ட ஆயுள் கொண்ட முதுகெலும்பு உயிரினமாக 211 ஆண்டுகள் வாழும் ‘போஹெட் திமிங்கலம்’ இருந்தது. ஆனால், கிரீன்லாந்து சுறா இந்த சாதனையை முறியடித்துள்ளது.