தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு, வெகுமதி: மேயா் பிரியா வழங்கினாா்
தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் கிளாராவுக்கு, மேயா் பிரியா பாராட்டுத் தெரிவித்து வெகுமதி வழங்கினாா்.
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் உள்ள இசிஆா் பிரதான சாலையில் மருதீஸ்வரா் கோயில் எதிரே வியாழக்கிழமை தூய்மைப் பணியில் கிளாரா ஈடுபட்டிருந்தபோது, சுமாா் 4 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்து, அதை திருவான்மியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்தூய்மைப் பணியாளா் கிளாராவை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தாா். தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை, சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, ரிப்பன் கட்டடத்துக்கு கிளாராவை அழைத்து அவரது நோ்மையைப் பாராட்டி, ரூ.10,000 வெகுமதி வழங்கினாா்.
நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் ப.ஜெயசீலன், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளா் ப.விஜய் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.