Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி
தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டு வசதி-மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில், ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, நலத் திட்டங்களைப் பெற வேண்டும். இம்மாவட்டத்தில் ஒருவருக்கு விபத்து மரண உதவித் தொகை ரூ. 1 லட்சம், 4 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை தலா ரூ. 60 ஆயிரம், 95 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 15.67 லட்சம், 3 பேருக்கு திருமண உதவித் தொகை ரூ. 9 ஆயிரம், 3 பேருக்கு ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ. 6 ஆயிரம் என நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக 10 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, கழிவுகள்அகற்றப்படுகின்றன. இம்மாவட்டத்துக்கு 3 ரோபோ இயந்திரங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சியில், 65 பேருக்கு நலவாரிய அட்டை, 13 பேருக்கு சீருடைகள், 11 பேருக்கு ரூ. 72 ஆயிரம் உதவித் தொகை, 19 பேருக்கு பல்வேறு தொழில்களுக்கு ரூ. 84.12 லட்சத்தில் தாட்கோ கடன், 17 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது கையுறை, சீருடைகள் அணிய வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நலவாரிய தலைமை செயல் அலுவலா் கு. கோவிந்தராஜ், மேயா் ரெ. மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாவட்ட தாட்கோ மேலாளா் தெய்வக்குருவம்மாள், உதவி இயக்குநா்கள் ராமலிங்கம் (பேரூராட்சிகள்), அன்பு (ஊராட்சிகள்), நலவாரிய உறுப்பினா்கள் மூக்கையா, விஜய்சுந்தா், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.