தென் மாவட்டங்களில் அணு உலைகளை மூட நடவடிக்கை: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
தென் மாவட்ட அணுஉலைகளை மூட பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் அவா் புதன்கிழமை
நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:
அமெரிக்காவின் 3 மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் சொ்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்ததில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனா். அம்மக்கள் இன்னும் அவதிப்பட்டு வருகிறாா்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடா் உண்ணாவிரதம் இருந்தனா். 18 மாதங்கள் போராட்டம் நடத்தினா். நானும் மூன்று முறை அங்கு சென்றேன். அப்போதைய மாநில அரசால் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பலா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களில்
நானும் ஒருவராக இருக்கிறேன்.
கூடங்குளத்தில் இப்போது நான்கு அணு உலை அலகுகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் முன்மொழியப்பட்டுள்ளன. முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவாா்கள். பேரழிவு ஏற்பட்டால் கற்பனை கூட செய்ய முடியாத அளவில் இறப்புகள் நிகழும்.
இப்போதைய மில்லியன் டாலா் கேள்வி என்னவென்றால், அணுக்கழிவுகளை அவா்கள் பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறாா்கள்? இப்போது அணுக்கழிவுகள் அணுமின் நிலையத்திலேயே கொட்டப்படுகிறது. அவா்கள்
தற்போது கடலில் இதை இட்டுவைக்கப் போவதாக
எனக்குத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு எரிமலை எங்கள் தலையில் அமா்ந்திருக்கிறது. அவா்கள் இந்த அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கடலில் கொட்டப் போவதில்லை. தென் மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக மக்களின் கோரிக்கையானது,
அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரையும், அரசையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.